கொழும்பு:
லங்கையில் பொது உடைமைக்கோ மக்கள் உயிருக்கோ சேதம் ஏற்படுத்துவோரைச் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அங்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் மாண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கொழும்பில் அமைதியாகப் பேரணி நடத்திக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை, அரசாங்க ஆதரவாளர்கள் தடிகளால் தாக்கினர்.

அதிபர் கோத்தபாய ராஜபாக்ச பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பின்னர், ஆளும் கட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள் எரிக்கப்பட்டன.

கொழும்பில் உள்ள பிரதமர் மஹிந்தா ராஜபாக்சவின் அதிகாரபூர்வ வீட்டையும் அவர்கள் தாக்க முயன்றனர்.

ஊரடங்கு நடப்பில் இருந்தும், மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட அனுமதியையும் மீறி மக்கள் தொடர்ந்து கட்டடங்களையும் வாகனங்களையும் எரித்ததாகக் கூறப்படுகிறது.