சென்னை:  ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள பொதுக்கழிப்பறையை புதுப்பித்து 8 ஆண்டுகள் பராமரிக்க சென்னை மாநகராட்சி ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டெண்டர் கோரியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களும், அவற்றில் 200 வார்டுகளும் உள்ளன. தினமும் ஒரு கோடி பேருக்கும் மேல் வந்து செல்லும் பகுதி யாக சென்னை உள்ளது. மாநகராட்சி சார்பில் தற்போது 816 இடங்களில் 7,247 இருக்கைகளுடன் பொதுக் கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்தந்த மண்டலங்கள் சார்பில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாதிரி திட்டமாக சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் 3 மண்டலங்களில் உள்ள கழிப்பறைகளைச் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  அதன்படி,  சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலத்தில் இடம்பெற்றுள்ள மெரினா கடற்கரைப் பகுதியில் உள்ள கழிப்பறைகளை புதுப்பித்து, 8 ஆண்டுகள் பராமரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதுபோல,  ராயபுரம் மண்டலத்தில்  சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தலைமைச் செயலகம், பிராட்வே பேருந்து முனையம், அரசு பொது மருத்துவமனை, நேரு விளையாட்டு அரங்கம், ரிப்பன் மாளிகை, அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவை இந்த மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.  திரு.வி.க.நகர் மண்டலத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 2-ம் நிலை அரசு அலுவலகங்களும், பெரம்பூர் ரயில் நிலையம் உள்ளிட்டவையும் இந்த மண்டலத்தில் அமைந்துள்ளன.

இந்தப் பகுதிகளில் 252 இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இப்பகுதிகளில் 2,642 இருக்கைகளுடன் கழிப்பறைகள் உள்ளன.

இவற்றில் 42 இடங்களில் 519 இருக்கைகளைக் கொண்ட கழிப்பறைகள் முற்றிலுமாக இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட உள்ளன.

18 இடங்களில் கூடுதலாக 108 இருக்கைகளுடன் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.

192 இடங்களில் உள்ள கழிப்பறைகளில் 1,997 இருக்கைகள் பழுதுபார்க்கப்பட உள்ளன.

இந்தப் பணிகள் மற்றும் 8 ஆண்டு பராமரிப்பு பணிகள் ஆகியவை மொத்தம் ரூ.285 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் சிசிடிவி கேமரா நிறுவுதல், மக்களின் கருத்துகளைக் கேட்டறிதல், பணியாளர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு உள்ளிட்டவையும் இடம்பெறும்.

இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் உலகத் தரத்தில் மேம்பாடு அடையும். இதன் மூலம் பயன்களை அடிப்படையாகக் கொண்டு, இதர மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.