டெல்லி:
புதிய பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிப்பால் மொபைல் போன் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை உருவாகிவிட்டது.
2016-17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் கிரிஷ் கல்யாண் வரி திட்டத்தின் கீழ் அனைத்து சேவை சார்ந்த வரி இனங்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வரி வசூல் செய்யப்படும் என அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இந்த கூடுதல் வரி பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் வரி விதிப்பு காரணமாக இனி மொபைல் போன்களின் கட்டணம் அதிகரிக்கும். போஸ்ட் பெய்டு, பிரீபெய்ட் ஆகிய இரு கட்டணங்களும் கனிசமாக உயரும். ஏற்கனவே சேவை வரி வசூல் செய்யப்படுகிறது. இது தவிர தற்போது கூடுதலாக வசூல் செய்யப்படவுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் 12.36 சதவீதமாக இருந்த சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மொபைல் போன் கட்டணம் உயர்வை சந்தித்தது. மேலும், கடந்த ஆண்டு தொலை தொடர்புத் துறைக்கு 0.5 சதவீத ஆண்டு தீர்வை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.