சென்னை: மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி – உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி  துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொடர்  மே 10 ஆம் தேதி வரை 22 நாள்கள் நடைபெறவுள்ளன. இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று (7ந்தேதி) திட்டம், வளர்ச்சி, பொது, சிறப்பு திட்ட செயலாக்கம், நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்   மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் குறித்த இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை அமைக்க ஆய்வு செய்யப்படும் என்றும்,

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்பத்தூர் வரை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அதுபோல  பொது ( மறுவாழ்வு ) துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்,  உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த தாக்குதல் காரணமாக, அங்கு உயர்கல்வி படித்துவந்த தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசின் குழு ஈடுபட்டது. இந்தக் குழுவினர் டெல்லியில் தங்கி தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்படி 1,457 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். அவர்களை மீட்டு தமிழ்நாட்டில் பத்திரமாக கொண்டு வந்த சேர்க்க ரூ.3.26 கோடி செலவு ஆனதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பொது ( மறுவாழ்வு ) துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், ” உக்ரைனில் இருந்து வந்த 1,890 மாணவர்களில் 1,524 பேர் அரசு செலவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.3.26 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.