சென்னை: சட்டப்பேரவையில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓராண்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக திமுக பொய் விளம்பரம் செய்கிறது அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார், சட்டம் ஒழுங்கு கெட்ட திமுக ஆட்சி என கடுமையாக விமர்சித்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் மாமன்றத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். அத்துடன் முக்கிய 5 திட்டங்களை அறிவித்தவர், கடந்த ஒராண்டு சாதனைகள் என்னென்ன என்பது குறித்து பட்டியலிட்டார்.
இந்த நிலையில், முதல்வரின் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவை வளாகத்தில், செய்தியளார்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யான விளம்பரத்தை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைத்த இந்த ஓராண்டு காலத்தில் சட்டம் ஒழுங்க முழுமையாக கெட்டு விட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற நிலையில் அந்த முடிவுற்ற பணியைத்தான் முதல்வர் இன்று திறப்பு விழாவாக காண்கிறார்.
மேலும், அம்மா அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு தான் முதல்வர் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறார். இந்த ஓராண்டுகால திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை,நடைமுறைபடுத்தப்படவில்லை. ஆனால்,அம்மா ஆட்சியில் இருந்த போதும்,மறைந்த போதும் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இதனால் அதிக அளவில் மக்களும் பயன் பெற்றார்கள் என்று கூறினார்.