சென்னை: திமுக அரசின் ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, வேலைவாய்ப்பு, பட்டா வழங்கியது மற்றும் நகைக்கடன் உள்பட ஏராளமான சாதனைகளை பட்டியலிட்டார். அத்துடன், காலை சிற்றுண்டி, தகைசால் பள்ளிகள் உள்பட முக்கிய 5 திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, ஆளுநர், அமைச்சரவை, நிதித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
முன்னதாக இன்று காலை சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னை இந்த மாமன்றத்தில் நிற்க வைத்த திமுக தீரர்கள் அனைவருக்கும் நன்றி. தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. .ஆட்சிப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி; எங்கோ ஒரு மூலையிலிருந்து, இங்கு என்னை நிற்க வைக்கும் திமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களால்தான் நான் இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறேன்” என்றார்
திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது; இந்த ஓராண்டு மக்களுக்காக உண்மையாக உளமாற உழைத்தேன். துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம் என்றும், மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். ஒராண்டில் கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன் என நம்புகிறேன் .
இந்த ஓராண்டில் 60 முதல் 70 விழுக்காடு அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம். இவையனைத்தையும் பட்டியலிடுவதற்கு காலம் நேரம் போதாது. நேரமில்லை. எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும். இந்த அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை உள்ளது. அதற்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டியிருக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் இதன் உள்ளடக்கம்.
ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கும் இந்த மகிழ்ச்சிக்குரிய நாளில் மக்கள் மகிழும் சில அறிவிப்புகளை வெளியிட இருக்கிறேன். சில மிக முக்கியமான 5 பெரும் திட்டங்களை வெளியிட மகிழ்ச்சியடைகிறேன்.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவோம். இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும்.
- இரண்டாவது திட்டம் – ஊட்டச் சத்து இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளை நலமுடம் வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு, ஊட்டச் சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பான ஊட்டச் சத்து திட்டம் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயனடைவார்கள்.
- டெல்லியை போன்று தமிழகத்திலும் “தகைசால் பள்ளிகள்” உருவாக்கப்படும். முதற்கட்டமாக ரூ.180 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். கலை, இலக்கியம், இசை போன்றவற்றை கற்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
- நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கக்கூடிய திட்டம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரப்போகிறது.
- ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்
- திமுகவின் ஓராண்டு ஆட்சியில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 68,800 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஊரக சுய வேலைவாய்ப்பு மூலம் 15 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர்.
- ஆவின் பால் விலை குறைப்பின் மூலம் ஒரு கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்
- நகைக்கடன் தள்ளுபடியால் 22,20,109 பேர் பயனடைந்துள்ளனர்
- அகவிலைப்படி உயர்வால் 9.32 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்
- இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்
- ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது உள்பட பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார்.