சென்னை: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன் ஒராண்டில் கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன் என நம்புகிறேன் என சட்டப்பேரவை யில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இன்று (சனிக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, சட்டப் பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் ஓராண்டில் திமுக நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் சாதனைப் பட்டியலை எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது:-
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடன் உழைத்திருக்கிறேன் என்ற மனநிறைவுடன்தான் இந்த மாமன்றத்தில் நின்றிருக்கிறேன்.
தனிமனித வாழ்வில் ஓராண்டு என்பது மிக நீண்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டில், மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளிதான். துளிபோன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல்போன்ற விரிந்த சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.
என்னை இந்த மாமன்றத்தில் நிற்க வைத்த திமுக தீரர்கள் அனைவருக்கும் நன்றி. தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. இவர்களால்தான் நான் இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறேன்” என்றார்.
ஆட்சிப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி; எங்கோ ஒரு மூலையிலிருந்து, இங்கு என்னை நிற்க வைக்கும் திமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது; இந்த ஓராண்டு மக்களுக்காக உண்மையாக உளமாற உழைத்தேன்.
துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம்
மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். ஒராண்டில் கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன் என நம்புகிறேன்
இவ்வாறு சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.