சென்னை: இந்தியாவின் ஆன்மிகத் தலைநகர் தமிழ்நாடு என்றும், இந்தியாவை நம்பர் 1 நாடாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என்றும் சென்னையில் நடைபெற்ற 12வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
12வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில், மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது,பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதாகக் குறிப்பிட்டவர், முந்தைய காலங்களில், புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும் அதற்கு நிதி ஒதுக்குவதற்கும் ஓராண்டு காலத்தை செலவிடுவார்கள். ஆனால் 4வது ஆண்டு வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு தேர்தலை எதிர்கொள்வது பற்றியே யோசிப்பார்கள் என்றார். இதுதான் நமது நாட்டின் வழக்கமாக இருந்தது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்காமல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்படுவதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் உலகிற்கு வழிகாட்டும் நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என தெரிவித்த ஆளுநர், அதனையே, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் முழக்கம் வெளிப்படுத்துவதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா, 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதை சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர்.என். ரவி, இதுதான் புதிய இந்தியா என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசியவர், இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு விளங்குவதாகக் குறிப்பிட்டார். இந்தியா குறித்த பார்வையை உணர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய பெரியவர்கள் பலரும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.