சென்னை: இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் வர முயற்சித்த ஈழத்தமிழர்கள் 14 பேரை கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து பல இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகை தருகின்றனர்.
ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு, இலங்கை மன்னார் பேசாலைப் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செல்ல முற்பட்டனர். இதை பார்த்த இலங்கை கடற்படை அவர்கள் வந்த படகை சுற்றி வளைத்து, அதில் இருந்த 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் பேசாலை கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் செய்யப்பட்டவர்களில் நால்வர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இலங்கை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.