சென்னை: முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் வகையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தற்போதுள்ள நடைமுறைப்படி, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக ஆளுநரே செயல்பட்டு வருகிறார். இதனால், மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், மாநில அரசே துணைவேந்தரை நியமனம் செய்யும் வகையில் சட்டமசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவை யில் மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தால் நேற்று (27-4-2002) அன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டில், சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப்பல்கலைகழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிமுகம் செய்தார். புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா என்று அனைத்திற்கும் முதலமைச்சரே தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா இன்று சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.