சென்னை: பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.3,270 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக சட்டப்பேரவையில் பதிவுத்துறை மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை, மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, துறைகள் சார்பாக அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.மூர்த்தி ஆகியோர் பதிலளித்து, பல்வேறு புதிய அறிவிப்பு களை வெளியிட்டனர்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது, தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது; வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
எனது விலைப் பட்டியல் எனது உரிமை” என்ற திட்டம் செயல்படுத்தப்படும். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும்.
இதையடுத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது அதில், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவில் வருவாய் பங்களிப்பு மற்றும் இதர இனங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2021-2022 நிதியாண்டில் பதிவுத்துறையின் மூலம் ஈட்டப் பட்ட மொத்த வருவாய் ரூ.13,913.65 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வருவாய் இதுவரை வசூலிக்கப்படாத அளவுக்கு அதிக அளவிலான வருவா என்றும், இது முந்தைய 2020-2021 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருவாயை விட ரூ.3,270.57 கோடி அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் பங்களிப்பு
அரசு கருவூலத்திற்கு அதிக வருவாய் பங்களிப்பு செய்யும் துறைகளில் பதிவுத்துறையும் ஒன்றாக உள்ளது. 2021-2022 நிதியாண்டில் இத்துறையின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.13,913.65 கோடி ஆகும். இது பதிவுத்துறையில் இதுவரை ஈட்டப்படாத மிக அதிக அளவிலான வருவாயாகும்.
இத்தொகையானது முந்தைய 2020-2021 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருவாயை விட ரூ.3,270.57 கோடி அதிகமாகும்.
2020-21 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ரூ.26,95,650 ஆக உள்ள நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 11.22 சதவீதமாக உயர்ந்து ரூ.29,98,048 ஆக பதிவானது.
இதர இனங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய்
திருமணங்கள், சீட்டுகள், சங்கங்கள் பதிவு மற்றும் இதர இனங்களின் கீழும் பதிவுத்துறையால் வருவாய் ஈட்டப்படுகிறது. 2021-2022 நிதியாண்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்கள்:
திருமணப்பதிவு – ரூ.3.80 கோடி, சங்கங்கள் பதிவு – ரூ.9.98 கோடி, சீட்டு பதிவு – ரூ.14.46 கோடி, இதர கட்டணங்கள் (பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் குறுந்தகடுகள் உள்பட) – ரூ.18.54 கோடி, பங்குச் சந்தை ஆவணங்கள் (Marketable Securities) மற்றும் காப்பீட்டுத் திட்ட ஆவணங்கள் (Insurance policies)- ரூ.366.60 கோடி என மொத்தம் ரூ.413.38 கோடி ஈட்டியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.