சென்னை: சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளி யிட்டு உள்ளது. அதுபோல நேற்று போக்குவரத்து காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 2094 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசல் காரணமாக எங்கு நோக்கிலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. குறிப்பாக அலுவலகம் செல்லும் காலை, மாலை வேளைகளில் சாலையில் செல்லும் வாகன நெரிசலால் மக்கள் சொல்லோனா துயரத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகம் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களை செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை நந்தனம் சந்திப்பில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுவதாக போக்கு வரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகை யில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி,
வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டொயட்டோ ஷோரூம் முன் “யூ திருப்பம்” திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.
செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயட்டோ ஷோரூம் முன் “யூ திருப்பம்” திரும்பிச் சென்று அவர்கள் சேருமிடத்தை அடையலாம்.
பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டொயட்டோவுக்கு முன்னால் “யூ திருப்பம்” திரும்பி அவர்களின் இலக்கை அடை யலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் இது சம்மந்தமாக ஆலோசனைகள் இருப்பின் dcpsouth.traffic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், நேற்று போக்குவரத்து காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 2094 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவது. அதிக வேகமாக வாகனம் ஓட்டி மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த நேற்று (27.04.2022) சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
இந்த தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக 1,595 வழக்குகளும், வேகமாக வாகனம் ஓட்டியதற்காக 96 வழக்குகளும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதற்காக 403 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தணிக்கை தொடர்ந்து நடத்தப்படும், அனைத்து வாகன ஓட்டிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.