சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் சந்திமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் வரும் மே மாதம் 5ந்தேதி அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஏற்கனவே அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டின் உள்ள ஆதீன மடங்களின் தலைவர்களுடன் முதலமைச்சர் சந்தித்து பேசினார். அவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.
இன்று முதல்வருடன் நடைபெற்ற ஆதீனம் ஆலோசனை கூட்டத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனம் ஆகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி 28ஆவது குருமகா சன்னிதானம், அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜஜீயர், திரு கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகாசன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29ஆவது குருமகா சன்னிதானம், ஸ்ரீ காமாட்சிதாஸ் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் சந்திமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.