சென்னை: ஜெயலலிதா மரணம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையானது இடையில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு காரணமாக 2 ஆண்டு காலம் முடங்கியிருந்த நிலையில், பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின் படி, விசாரணை நடைபெற்று வந்தது. அப்போலோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராகி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, சமீபத்தில் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. தொடர்ந்து பலரிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 156 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அளித்த மனு மீதான விசாரணை இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து எடப்பாடியிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் அனைத்து விசாரணைகளும் நிறைவுபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.