சென்னை; வாழை மரப்பட்டைகள், நார்களை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை,திறன் மேம்பாட்டு துறை,தொழிலாளர் நலன் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளார்கள்.
முன்னதாக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துரைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் வாழை அதிகளவில் விளைகிறது; இங்கு வாழை தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில் செல்வராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு; வாழை மரப்பட்டைகள், நார்களை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளது என கூறினார்.
ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைப்பது பற்றி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த உடன், அந்த ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.
2006-2011 காலத்தில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் ஒன்றியம், மணக்கரை ஊராட்சி கீழக்கால் தாமிரபரணி ஆற்றில் படித்துறைகள் கட்ட 2022-2023-ம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடித்துத்தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.