சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநிலஅரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய அமர்வில், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் ஆளுநரின் அதிகாரங்களை பறிக்கும் வகையில், மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
முன்னதாக மத்திய தேசியக் கல்விக் கொள்கை 2020 நடப்பாண்டு முதல் அமல்படுத்தி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி, பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் அதனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகஅரசு, கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருவதுடன், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மத்தியஅரசு நியமிக்கும் முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.