சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் 100ஆண்டுகள் பழமைவாய்ந்த 2 கோயில்கள் இடிக்க தமிழக அரசு இடிக்க முனைந்த நிலையில், தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை போட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு இடங்கள், நீர்நிலைககள், சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், கட்டிடங்களை இடிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதையொட்டி, தமிழக அரசு ஏராளமான இந்து கோவில்களை இடித்து தள்ளுகிறது. அதே வேளையில், பல அரசு கட்டிங்கள் நீர் நிலைகளிலும், ஆக்கிரமிப்பு இடங்களிலும் உள்ளது. அதை தமிழகஅரசு கண்டுகொள்வதில்லை. இந்து கோவில்கள் மட்டும் இடிக்கப்படுவது இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயிலும், வடுகபாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, இரு கோயில்களையும் இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ள பாளையத்தைச் சேர்ந்த கோபிநாதனும், வடுகபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், நூறாண்டுகள் பழமையான இந்த கோயில்கள் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை எனவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்டப்பட்டதாகவும் கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த கோயில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதிகள், நூறாண்டுகள் பழமையான இரு கோயில்களை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
ஏற்கனவே திமுக அரசு பதவி ஏற்றது முதல் ஆக்கிரமிப்பு என கூறி உயர்நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, இந்து கோவில்களை மட்டுமே இடித்து தள்ளி வரும் நிலையில், தற்போது 100 ஆண்டு பழமையான கோவிலை ஆக்கிரமிப்பு இடம் என கூறி மாவட்ட நிர்வாகம் இடிக்க முயன்றுள்ள செயல் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இந்துமக்களின் மீது மாநில அரசின் வன்மத்தையே காட்டுகிறது.
உண்மையிலேயே நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதுபோல மாநில அரசு நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க முன்வருமானால், தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் பலநூறு அரசு கட்டிடங்கள், கலெக்டர் அலுவலகம், காவல்துறை அலுவலகம் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். ஏனென்றால், அவை அனைத்தும், நீர் நிலைகளை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி சென்னையின் பெரும்பகுதியே நீர்நிலையை ஆக்கிரமித்துதான் நகரமயமாக்கல் நடைபெற்றுள்ளது என்பதையும் மறந்து விட முடியாது.
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களை இடித்து, இந்து மதத்தை அழிப்பதில், ஆர்வம் காட்டும் தமிழகஅரசு, புற்றீசல் போன்ற ஆங்காங்கே முளைத்துள்ள ஆயிரக்கணக்கான தேவாலயங்களையும், மசூதிகளையும் இடிப்போம என உறுதி கூற முடியுமா?
தமிழகஅரசு மக்களுக்கான அரசாக இருக்க வேண்டுமே தவிர, ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது. 100 ஆண்டு கால பழமை வாய்ந்த கோவில்களை இடிக்க முனையும் திமுக அரசின் இந்துவிரோத நடவடிக்கை, அக்கட்சி மீது மட்டுமின்றி, தமிழகஅரசு மீதும் வரலாற்று பிழையை உருவாக்கி விடும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டால் சரி.