கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த சந்தோஷ் இன்று உடுப்பியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டார்.

பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த கான்டராக்டரான சந்தோஷ் கடந்த இரு தினங்களாக காணவில்லை என்றும், நேற்று அவரது நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தேடுதலில், அவர் உடுப்பி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் பிணமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

நேற்று தனது நண்பர்களுக்கு அனுப்பிய தகவலில் “நான் திரும்பாத ஊருக்கு பயணம் செய்ய போகிறேன். என்னுடைய ஆசைகள், ஆசைகள் அனைத்தையும் அடக்கிக்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். பிக்னிக் செல்கிறோம் என்று பொய் சொல்லி சில நண்பர்களை அழைத்து வந்துள்ளேன். ஆனால், எனது மரணத்திற்கு அவர்கள் காரணமில்லை,” தெரிவித்துள்ளார். “எனது பிரச்சனைகளை எடுத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்,”

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா எனது மனைவி மற்றும் குழந்தையை பாதுகாக்க வேண்டும். “லிங்காயத் சமூகத்தின் மூத்த தலைவரான எடியூரப்பா மற்றும் எனது குடும்பத்திற்கு உதவக்கூடிய எவரும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் எழுதியுள்ளதாக முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

“எனது மரணத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மட்டுமே காரணம். அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். எனது கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது மனைவி மற்றும் மகனுக்கு பிரதமர், முதல்வர், மூத்த லிங்காயத் தலைவர் எடியூரப்பா ஆகியோரின் உதவி கிடைக்க வேண்டும். RDPR அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தண்டிக்கப்பட வேண்டும் என்று தனது மரண வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

ஈஸ்வரப்பாவின் கமிஷன் விவகாரம் குறித்து வெளியில் கூறிய சில நாட்களில் கான்டராக்டர் சந்தோஷ் மர்மமான முறையில் இறந்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.