ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களைத் தொடர்ந்து இஸ்லாமிய ஓட்டுனர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்து மைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

பாரத ரக்ஷனா எனும் இந்து அமைப்பைச் சேர்ந்த பிரசாந்த் பங்கேரா என்பவர் கோவில்கள் மற்றும் புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்கள் இஸ்லாமியர்களை ஓட்டுநர்களாக உள்ள வாகனங்களில் செல்லாதீர்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு அனைத்து இந்துக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ஸ்ரீ ராம் சேனா என்ற மற்றொரு இந்து அமைப்பு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய ஸ்ரீ ராம் சேனா நிறுவன தலைவர் பிரமோத் முத்தாலிக், “கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சவடத்தி எல்லாம்மா ஆலயத்தில் உள்ள இஸ்லாமிய வியாபாரிகளை வெளியேற்ற கர்நாடக மத வழிபாட்டு நிர்வாக துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் சவடத்தி எல்லாம்மா ஆலயத்தில் 50 சதவீத கடைகள் இஸ்லாமியர்களால் நடத்தப்படுகிறது, இது தொடர்பாக கர்நாடக துணை சபாநாயகர் மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆனந்த் மாமனி ஆகியோரிடம் ஏற்கனவே ஸ்ரீ ராம் சேனா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் கர்நாடக மாநிலத்தில் மத ரீதியிலான சர்ச்சையை ஏற்படுத்துவதன் மூலம் பெரும்பான்மையானவர்களின் ஓட்டுகளை பெற பா.ஜ.க. தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயன்று வருவதாக கூறப்படுகிறது.