டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக சிதறியது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான இரட்டை இலை தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அந்த சின்னத்தை தனது கட்சிக்கு பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு  பல கோடி ரூபாய் லஞ்சம் தர டிடிவி தினகரன் முன்வந்தது தெரிய வந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க பெங்களூருவைச் சேர்ந்தசுகேஷ் சந்திரசேகரிடம் டிடிவி தினகரன்  அணியினர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் உள்பட பலர் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த புகார் மீது அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
டிடிவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது,  சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார். தற்போது டிடிவி ஜாமினில் உள்ளார்.
இந்த நிலையில்,  சுகேஷ் சந்திராவிடம் அமலாக்கத்துறையினர் நடத்தி விசாரணையின் போது இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன்  தனக்கு (சுகேஷ் சந்திரா) ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக  வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு (2021ம் ஆண்டு)  திகார் சிறையிலிருக்கும் சுகேஷ்சந்திரசேகரின் பண்ணை வீடு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானாத்தூரில் உள்ளது. இந்த வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 16 சொகுசு கார்கள், லேப்டாப்கள், 85 லட்சம் பணம், தங்க கட்டிகள்  உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பண்ணை வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சி களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.