சேலம்: டீசல் விலையை குறைக்காவிட்டால், தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் நடத்தப்படும் என மத்தியஅரசுக்கு லாரி உரிமை யாளர்கள் 21நாள் கெடு விதித்துள்ளனர்.
5மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, நாடு முழுவதும் எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. டீசல் விலை லிட்டர் ரூ.100 தாண்டியும், பெட்ரோல் விலை ரூ.110ஐ தாண்டியும் உயர்ந்து வருகிறது. மேலும், சுங்க கட்டணம் உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய டீசல் விலை உயர்வும் லாரி தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. எனவே விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ், உக்ரைன்-ரஷியா போரை காரணம் காட்டி தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவ தாக அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த 14 நாளில் டீசல் விலை ரூ.8 அதிகரித்துள்ளது. இது தவிர சுங்க கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலாவதியான சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அரசு அதை கண்டுகொள்ள வில்லை. சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சென்னையில் நடந்த தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.
21 நாட்களில் இந்த விலை உயர்வை குறைக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா உள்பட 7 மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். எனவே விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.