லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, ரோமியோ எதிர்ப்புப் படை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. யோகி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், மீண்டும் ரோமியோ எதிர்ப்பு படை செயல்பாடுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில், பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதல்வராக, யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து, கடந்த ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட, பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ரோமியோ எதிர்ப்புப் படை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சிக்கு வந்த 100 நாட் களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த செயல் திட்டத்தை யோகி அரசு அறிவித்து உள்ளது. அதில், ரோமியோ எதிர்ப்புப் படை மறுசீரமைப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, இந்த படையினர் ஏப்ரல் 2ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காவல்படையினர், பள்ளி, கல்லூரி பகுதிகளில், சந்தைகள், பெண்கள் இருக்கும் பகுதிகளில் ரோந்து செல்வார்கள். அந்த பகுதிகளில் தேவையின்றி சுற்றித் திரிபவர்களை கண்டறிந்து, அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். மேலும், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சந்தேகப்படும் நபர்கள் குறித்து புகார் தருமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர்.