சென்னை: சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக, அமமுக, பாஜக சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஏப்ரல் 5ந்தேதி (நாளை), பாஜக சார்பில் ஏப்ரல் 8ந்தேதியும், அமமுக சார்பில், ஏப்ரல் 10ந்தேதியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ந்தேதி முதல் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, தற்போதைய வரியைவிட குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும், கூட்டப்பட்ட வரியை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தை அறிவித்து உள்ளன.
அதிமுக ஆர்ப்பாட்டம்:
அதன்படி, நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் சொத்து வரியைதிமுக அரசு 150% வரை உயர்த்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திமுக அரசை கண்டித்தும், சொத்து வரியை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியும் மாவட்ட அளவில்அதிமுக 5-ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
அதன்படி, சென்னையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக போராட்டம்:
தமிழக அரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வை கண்டித்து ஏப்.8-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொத்துவரி உயர்வுக்கு திமுக அரசை கடுமையாக சாடியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது மக்கள் விரோதப்போக்காகும் என்றும், தமிழக அரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வை கண்டித்து ஏப்.8-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஏப்.10 முதல் தமிழகம் முழுவதும் தெருமுனை கண்டனக் கூட்டங்கள்: அமமுக அறிவிப்பு
சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தெருமுனை கண்டனக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. கொ ரோனா பாதிப்புக்குப் பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்படத்தொடங்கி இருக்கும் நிலையில், தமிழக மக்களை வாட்டி வதைக்கும் அறிவிப்புகளை திமுக அரசு வெளியிட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக வீடுகளுக்கான சொத்து வரியை 100% வரையிலும், வணிக இடங்களுக்கான சொத்துவரியை 150% வரையிலும் கொஞ்சமும் மனசாட்சியின்றி உயர்த்தியிருக்கிறார்கள்.
இதனைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அமமுகவின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தெருமுனை கண்டனக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. ஏப்ரல் 10-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள இக்கூட்டங்களில், விடியல் ஆட்சி தரப்போவதாக கூறி பதவிக்கு வந்த திமுகவின் உண்மை முகத்தை தமிழக மக்களிடம் தோலுரித்து காட்டுவோம். இந்தக் கூட்டங்களை அந்தந்த பகுதிகளில் ஒருங்கிணைத்து நடத்திடுமாறு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் அனைத்து நிலையிலுள்ள கழக நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.