விருதுநகர்: 22வயது பட்டியலின இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அதை வீடியோ எடுத்து மிரட்டி பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்த திமுக நிர்வாகிகள் 2 பேர், 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக நிர்வாகி உள்பட 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது இளம் பெண் ஒருவரை, திமுக நிர்வாகி ஹரிஹரன் என்பவர் காதலிப்பதாக கூறி நாடகமாடி வந்துள்ளார். அதனை நம்பி பழகிவந்த அந்த பெண்ணுடன், ஹரிஹரன் தனிமையில் இருந்ததை வீடியோவாக பதிவு செய்து, தனது நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு அந்த வீடியோவைக் காட்டி ஹரிஹரன் நண்பரான மற்றொரு திமுக நிர்வாகி ஜூன் மற்றும் பலர் அந்த இளம்பெண்ணை மிரட்டி, பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அவரது காதலன் திமுக நிர்வாகி ஹரிஹரன், மற்றொரு திமுக நிர்வாகி ஜூனத் அஹமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேரை கடந்த 29ம் தேதி போலீஸார் கைது செய்தனர். பள்ளி மாணவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரிஹரன், ஜூனத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரையும் 6 நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். அவர்களது போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், 4 பேரும் அன்று மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி கோபிநாத், 4 பேரையும் ஏப்ரல் 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.