சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வரும்  12ந்தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த 450 மெகாவாட் திறன்கொண்ட எண்ணூர் அனல் மின் நிலையம் கடந்த  2017-ஆம் ஆண்டில் மூடப்பட்டது. பிறகு அதே பகுதியில், 600 மெகாவாட் திறனுடைய அனல் மின் நிலையத்தின் 2 உற்பத்தி மையங்களை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) திட்டமிட்டது. அதனடிப்படையில், 600 மெகா வாட் உற்பத்தித் திறன்கொண்ட எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க அலகுக்கு, கடந்த 2009-ல் மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகம் 10 ஆண்டுகால அனுமதி வழங்கியது.

இந்த அனுமதி 2019-ல் காலாவதியாகும் நிலையில் இருந்தது. 2018 நிலவரப்படி  ரூ.703 கோடி செலவில்அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிக்கு மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு 2018-ல் டான்ஜெட்கோ கடிதம் எழுதி இருந்தது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு வழக்கு சமுக ஆர்வலர் தொடர்ந்த வழக்கு காரணமாக, அவ்வப்போது தடங்கல் ஏற்படுவதும், பின்னர் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மீண்டும் அனல் மின் நிலையம் செயல்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி  பெற பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துகளைப் பெற்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கான ஏப்ரல் 12ம் தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் புதிதாக அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால் புதிய சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.