சென்னை: ஆளுநர் தவறும் பட்சத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழக அரசின் நீட் விலக்கு உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறார். இதைக் கண்டித்து, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இது இன்று மக்களவையில் எதிரொலித்தது. ஆனால் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து லோக்சபாவில் திமுக எம்பிக்கள் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஆளுநரை திரும்பப் பெறக்கோரி நாடாளு மன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதனால் இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்ப வேண்டும். இதற்கு உரிய கால அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்யவேண்டும். ஆளுநர் தவறும் பட்சத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.’ என பதிவிட்டுள்ளனர்.