கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தினசரி சுமார் 10மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கி உள்ள னர். அங்கு அரிசி உள்பட உணவுப்பொருட்கள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், எரிபொருட்கள், சமையல் எரிவாயு கிடைப்ப திலும் கடுமையான சிக்கல் எழுந்துள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பற்றாக்குறையாக உள்ளன.
இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அரிசி உள்பட அத்தியாவசிய முக்கிய பொருட்களின் திடீர் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே மணிக்கணக்கில் வரிசை யில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழச் செய்யும் வகையில் இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நிதி உதவியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக இந்தியா அண்மையில் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இலங்கைக்கு சென்று, பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையின் பொருளாதார சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்ததுடன், அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இலங்கையில் தற்போது தினசரி 10 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தினமும் பல மணிநேரம் மின்வெட்டுக்கு ஆளாகின்றனர். எரிபொருள் கிடைக்காததால் ஏற்பட்ட நீர்மின்சார பற்றாக்குறை காரணமாக, இலங்கை அரசாங்கம் புதன்கிழமை நாடு முழுவதும் 10 மணிநேர தினசரி மின்வெட்டை விதித்துள்ளது.
இந்த மாத (மார்ச்) தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் ஏழு மணி நேர மின் தடை தொடர்ந்த நிலையில், தற்போது அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் கிடைக்காததால் 750மெகாவோட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின்வெட்டு 10மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதா, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்திய அரசு வழங்கியுள்ள எரிபொருட்கள் வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு கிடைக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டு ஸ்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. அதனால், எரிபொருள்களை வாங்குவதற்கு, பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் கூட்டுத்தாபனத்தின் இலங்கை துணை நிறுவனமான LIOC இலிருந்து 6,000மெட்ரிக் டன் டீசலை அரசாங்கம் அவசரமாக கொள்முதல் செய்யவுள்ளதாகவும் இலங்கை எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.