சென்னை: தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில், சமூக வலைதளங்களைக் கண்காணிக்க இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் (Pegasus Spyware) மூலம் மத்தியஅரசு, எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என பலரை கண்காணித்து வந்த விவகாரம் பூகம்பமாக வெடித்தது. இந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்கு தமிழகஅரசும் இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெகாசஸ் விவகாரம். இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்காணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்தியாவிலும் இந்த உளவு மென்பொருளால் எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதி மன்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் 40 பத்திரிகை யாளர்கள் பெயர்களும் இருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் அமளி துமளிப்பட்டன. உச்சநீதி மன்றமும் விசாரணை குழு அமைத்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சைபர் கிரைம் துறையில், இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக் கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்கள் மீதான பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், வங்கி மோசடி, சமுக வலைதளங்களில் போலி செய்திகள், வதந்திகள் பரப்புவது போன்றவற்றை தடுக்கும் வகையில், அதை கண்காணிக்கும் வகையில் புதிய மென்பொருள் உபயோகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை வேப்பேரியில் அதிநவீன சைபர் தடய ஆய்வகம் உருவாக்கப்பட்டு இணையவழி குற்றங்கள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், அதாவது, பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற, சமூக வலைதளங்களைக் கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம் போலீஸாரின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை போலீஸாருக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய காவல்துறை அதிகாரிகள், இஸ்ரேலின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் மற்றும் போலீஸாருக்கு வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழகஅரசும், இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.