கீவ்: உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. இதனால், ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக  உக்ரைன் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நேட்டோ விவகாரத்தில் உக்ரைன்மீது ரஷ்யா பிப்ரவரி 24ந்தேதி போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் இன்று 33வது நாளாக தொடர் கிறது. இரு நாட்டு தலைவர்களின் ஈகோ காரணமாக, போர் தொடர்கிறது. சுற்றுலா தலமாகவும், வெளிநாட்டு மாணவர்களை கல்விக்கு ஈர்க்கும் களமாகவும், சூரியகாந்தி எண்ணெய் வித்துகளின் உற்பத்திக் கலனாகவும் அறியப்பட்ட உக்ரைன் இன்று சுடுகாடாக மாறி வருகிறது.  எரிந்த கட்டிடங்கள் நிறைந்த நகரங்கள், மக்களற்ற தெருக்கள், ஆங்காங்கே பங்கர்களில் உணவின்றி, தண்ணீரின்றி தவிக்கும் மக்கள், பதுங்குழிகளில் விளையாடும் குழந்தைகள் என்று உருக்குலைந்துள்ளது. மொத்தம் 4.5கோடி மக்கள் தொகை கொண்ட உக்ரைனிலிருந்து 1கோடி பேர் வெளியேறி விட்டனர். அவர்கள் உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டைகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதற்கிடையில், உக்ரைனின் சில முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்கி அழித்து வருகின்றன. விரைவில் தலைநகர் கீவ்வையும் கைப்பற்றுவோம் என்று ரஷ்யா கூறி வருகிறது. மேலும், உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து நடைபெற்ற செர்னோபில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதியை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ளன.

இதை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வந்த நிலையில், அணுமின் நிலையம் தாக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால், அணுமின் நிலையம் மீது தாக்கதல் நடத்தாமல், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதை சுற்றி வளைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால், அணுமின் நிலைம் முழுவதுமாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  டிவிட் பதிவிட்டுள்ள உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக், ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள விலக்கு மண்டலத்தை ராணுவ மயமாக்குகின்றன. எனவே செர்னோபில் நிலையத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும்.

அணு உலையை சேதப்படுத்துவதால் உக்ரைனில் மட்டுமல்ல, மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், வளிமண்டலத்தில் கணிசமான அளவு கதிரியக்கம் பரவும்.  ஆனால், ரஷ்யா இந்த பெரும் ஆபத்தை உணராமல், அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்து ஆயுதங்களைக் கொண்டு செல்கிறது என கூறியுள்ளார்.

அணுஉலையை ரஷ்ய படைகள் முழுமையாக கைப்பற்றி  உள்ள உக்ரைன் நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலக நாடுகளும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. அணுஉலை மீது ஏதாவது தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டால் அதனால் எற்படும் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.