பனாஜி: கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், மாநில முதலமைச்சராக 2வது முறையாக  பிரமோத் சாவந்த் பதவி ஏற்றார். அவருக்கு மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

40 சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிகளைக்கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றியது.  பாஜகவைத் தொடர்ந்து, 11 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மேலும், சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஒரு இடங்களில் வெற்றி பெற்றது.

கோவாவில் ஆட்சி அமைக்க  21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 3 சுயேச்சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தன.

இதையடுத்து,  கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதன்படி, இன்று காலை கோவா தலைநகர் பனாஜி நகரில் உள்ள டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவாவின் முதல்வராக பிரமோத் சாவந்த் முதல்வராக இன்று பதவியேற்றார். தொடர்ந்து விஸ்வஜீத் ரானே, ரவி நாயக்,  நிலேஷ் கப்ரால், அடானாசியோ மான்செரேட் உள்ளிட்ட 8 பாஜக எம்எல்ஏக்கள், பிரமோத் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

புதிய முதல்வர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், ஆளுநரின் அறிவுறுத்தலின்படி கோவா சட்டப்பேரவையில் 2 நாள் சிறப்பு அமர்வு நாளை தொடங்குகிறது. இதில் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள்,பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.