திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் பூஜை மற்றும் பிரசாதங்களின் கட்டணங்கள் விலை உயர்த்தப்படுவதாகவும், இந்த புதிய விலை உயர்வு ஏப்ரல் 10ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கேரளாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பல லட்சம் பேர், விரதமர் இருந்து, அய்யப்பனை தரிசித்து வருகின்றனர். அய்யப்பனை தரிசிக்கும் பக்தர்கள், அங்குள்ள பிரசாதங்களான அரவணை பாயாசம், அப்பம் பிரசாதம், நெய், விபூதி, குங்குமம் போன்றவற்றை வாங்கி வந்து தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி மகிழ்வர். கொரோனா தொற்று காரணமாக அங்கு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, பிரசாதம் வேண்டுவோர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், கோவில்களும் எப்போதும்போல திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை, பாயாசம், அப்பம் பிரசாதம், நெய், விபூதி, குங்குமம், மஞ்சள், அர்ச்சனை பிரசாதம் அடங்கிய தொகுப்பு மற்றும், அனைத்து பூஜை கட்டணங்களின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.