விழுப்புரம்: விழுப்புரம் மவாட்டத்தில் பெற்றோரை பட்டினிப் போட்டு கொடுமைப்படுத்தியதால், பெற்றோர்கள் மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்துகளை  ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தள்ளார் ஆட்சி மோகன். ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம் வளர்ந்துகொண்டிருக்க, மற்றொரு புறம், பெற்றவர்களை பிள்ளைகள் பாதுகாக்க தவறும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே ஏராளமான முதியோர் கள் தாங்கள் தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தைகளால் கவனிக்காததால், முதியோர் இல்லங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் முதியோர் இல்லங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்  சாந்தகுமாரி தம்பதியினர், தங்களிடம் இருந்து வீடு உள்பட சொத்துக்களை தங்களது மகன் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளனர். வயதான காலத்தில் தங்களை மகன் கவனித்துக்கொள்வார் என்ற ஆசையில், அவர்கள் சொத்துக்களை எழுதி தந்துள்ளனர். ஆனால், சொத்து தனது கைக்கு வந்ததும், அவர்களது மகன், தனது கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டார்.

வயதான பெற்றோருக்கு சரியான முறையில் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர்களின் உடல்நலப் பாதிப்புகளையும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மகனின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாத முதிய தம்பதியினர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்திக்க அலுவலகம் வந்துள்ளனர்.

ஆனால், அலுவலகத்தில் ஆட்சியர் இல்லாததால், அவரை சந்திக்காமல் செல்லமாட்டோம் என கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த  ஆட்சியர் மோகன், அந்த முதியோர் தம்பதிகளை நேரில் அழைத்துப் பேசினார். அப்போது, தாங்கள் பெற்ற மகனால், கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறோம், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து, மனு கொடுத்தனர்.

இதுகுறித்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் மோகன், மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு அந்த முதிய தம்பதியினர் மனதார நன்றி தெரிவித்துள்ளனர். அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.