சென்னை:  சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  அடிக்கல் நாட்டினார்.

கடந்த திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டப்பேரவையுடன் கூடிய நவீன வசதிகளுடன் மிகப்பெரிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டது. ஆனால், அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, அதை பன்னோக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியாக மாற்றிவிட்டது. தற்போது ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற முதலமைச்சர் விரும்புவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மே மாதம்  திமுக பதவி ஏற்றதும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ. 250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இது பொதுமக்களிடைய வியப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனை வெற்றிகரமாக இயங்கி வரும்  நிலையில் மீண்டும் சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை எதற்காக? என்று கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கு மாநில அரசு இதுவரை பதில் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. ஆனால், கோட்டை வட்டார தகவல்களோ, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றம் செய்வதற்கான அச்சராமே கிண்டி பல்நோக்கு மருத்துவமனை என்று  தெரிவிக்கினறன.

இந்த நிலையில்தான்,  சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய  பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த மருத்துவமனை  4.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 230 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைய உள்ளது.  முதல் கட்டமாக  மூன்று பிளாக்குகள்  கட்டப்படும் என கூறப்படுகிறது. A பிளாக்கில் ரூ.78 கோடி மதிப்பில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. B பிளாக்கில் ரூ.78 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடம் கட்டப்பட உள்ளன. C பிளாக்கில் ரூ.74 கோடி மதிப்பில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு கட்டப்பட உள்ளது.

தென்சென்னையில் அமையும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக இந்த பன்னோக்கு மருத்துவமனை இருக்கும். அதே நேரத்தில் ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாறவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.