சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக இன்றும்  அப்போலோ மருத்துவர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ‘ஜெயலலிதா மரணத்துக்கு கார்டியாக் அரெஸ்ட் தான் (திடீர் மாரடைப்பு) காரணம் என அப்போலோ மருத்துவர் மதன்குமார் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 21ஆம் தேதி ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும்,  சசிகலாவின் உறவினர் இளவரசி யும்  ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதுரு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அப்போலோ தொடுத்த வழக்கு காரணமாக கடந்த  இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்ட நிலையில், பின்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து அப்போலோ மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு நேற்று (மார்ச் 7ந்தேதி) முதல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று அப்போலோ மருத்துவர் பாபு மனோகர்   ஆஜரானார். அப்போது, மருத்துவர் சிவக்குமார் அழைத்ததின் பேரில், ஜெயலலிதா பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் கார்டன் சென்று அவரை சந்தித்தேன் என்று கூறிய பாபு மனோகர், ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்ததாகவும், சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்ததாகவும், ஆனால், நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் என்றும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, இன்று மருத்துவர் மதன்குமார் ஆஜரானார்.  அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.  அப்போது, ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக சசிகிலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அப்போலோ மருத்துவரிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மருத்துவர் மதன்குமார், ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை ஏற்பட்டது கார்டியாக் அரெஸ்ட் தான் எனவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றினோம் எனவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து,  ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு 4 மற்றும் 5ஆம் தேதி அப்போலோ மருத்துவ குழு எவ்வாறு செயல்பட்டது எனவும், அது திருப்தி அளிக்கிறதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அத்துடன், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை மற்றும் ஆணையத்தில் அளித்த வாக்குமூலங்களையும் சுட்டிகாட்டி அப்போலோ மருத்துவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து வரும் 21ந்தேதி விசாரணைக்கு ஆஜராக, அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ்-க்கும், சசிகலாவின் உறவினர் இளவரசியும்  ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ்-க்கு பலமுறை ஆணையம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், வரும் 21ந்தேதி அன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.