பெங்களூரு
உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் குண்டு வீச்சில் மரணம் அடைந்ததற்கு நீட் தேர்வு காரணம் எனக் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவத்தின் குண்டு வீச்சு தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் உயிர் இழந்தார். இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்பு படித்து வந்தார். இவரது மரணத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி மாணவர் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது அறிக்கையில்,
“மாணவர் நவீன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 96 சதவிகிதமும், பி.யூ.சி-யில் 97 சதவிகிதமும் மதிப்பெண் பெற்றும் இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான சீட் மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே தன் கனவை நனவாக்க நவீன் தன்னை மருத்துவராக உருவாக்கிக்கொள்ள உக்ரைன் சென்றுள்ளார். அவர் மரணம் இந்தியாவின் மனசாட்சியை இதற்கு யார் பொறுப்பு எனக் கேள்வி கேட்க வைத்துள்ளது.
பெற்றோர் மற்றும் மாணவர்களின் `மரண சிலை’யாக நீட் தேர்வு மாறியிருக்கிறது. உயர்கல்வி பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது.உக்ரைனில் நவீன் மரணம் பொருளாதார ரீதியில் தகுதி என்ற போர்வையில் நலிவடைந்த ஏழைக்குழந்தைகளின் திறமைக்கு அநீதி இழைக்கும் வெட்கமற்ற பிரதிபலிப்பே ஆகும். ஆகவே பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்”
எனத் தெரிவித்துள்ளார்.