ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தினமும் ரஷ்யாவில் இருந்து விமானம் மூலம் ரஷ்யர்கள் கோவா வந்திறங்குவார்கள்.
கொரோனா பரவலுக்குப் பின் கடந்த டிசம்பர் மாதம் முதல் ரஷ்யாவில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு சிறப்பு விமானம் என்ற ரீதியில் வந்து சென்றது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே போர் நிலவுவதால் கடந்த ஒரு வார காலமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்து எந்த ஒரு விமானமும் கோவா வரவில்லை.
போர் நிலவுவதால் உக்ரைனில் இருந்து விமானங்கள் இயக்கமுடியாத சூழல் உள்ளது தெரிந்த விவகாரம் தான் என்ற போதிலும், ரஷ்யாவில் இருந்து விமானங்கள் ஏதும் வராதது கோவா மக்களை கவலை கொள்ள செய்திருக்கிறது.
சுற்றுலா ஒன்றையே முக்கிய வருமானமாக கொண்டு செயல்பட்டு வரும் கோவா மக்கள் போர் காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வராததால் கவலையடைந்துள்ளனர்.
உள்நாட்டு பயணிகள் வரவு அதிகரிக்க துவங்கி உள்ள போதும் சிறு மற்றும் நடுத்தர உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையே நம்பி இருக்கும் நிலையில் ரஷ்யாவின் இந்த முடிவால் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.