சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கட்சியனர் அவர்களின் தலைவர்களை வாழ்த்தியும் பாட்டுப்பாடியும் உறுதிமொழிகளை ஏற்ற நிலையில், சிவகாசியில் வெற்றிபெற்ற அதிமுக உறுப்பினர் ஒருவர் எல்லாவற்றுக்கும் மேலாக எனது அரசியல் ஆசான் ராஜேந்திர பாலாஜிக்கு விசுவாசமாக இருப்பதாக கூறி பதவி ஏற்றார்.
சென்னை மாநகராட்சி உள்பட நகராட்சி பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று கவுன்சிலர்களாக பதவி ஏற்றனர். அப்போது எடுக்கப்படும் உறுதிமொழியின்போது, திமுக கவுன்சிலர்கள் ‘கலைஞர்’ கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டியும், சிலர் இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் ராகுல்காந்தியை வாழ்த்தியும், அதிமுக உறுப்பினர் ஒருவர் பாட்டுப்பாடியும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சென்னையில் 193வது வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக கவுன்சிலர் கோவிந்தசாமி பதவி ஏற்கும்போது, எம்ஜிஆர் பாடல் ஒன்றை பாடிவிட்டு உறுதிமொழி எடுத்தார்.
கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட திமுக கவுன்சிலர்கள், ‘கலைஞர் அறிய’, ‘தளபதி அறிய’, ‘அமைச்சர் செந்தில்பாலாஜி அறிய’ என்று கூறி, பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், சிவகாசி நகராட்சியின் 30வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் கரைமுருகன் என்பவர் பதவி ஏற்பின்போது, எனது அரசியல் ஆசான் ராஜேந்திரபாலாஜிக்கு விசுவாசமாக இருப்பேன் என்று கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், மக்களுக்காக உழைப்பேன் என்று உறுதிமொழி எடுக்காமல், தங்களது பிடித்தவர்களின் பெயரை கூறி அவர்கள் மீதான விசுவாசத்தை பறைசாற்றி உறுதிமொழி எடுத்திருப்பது, இவர்களா மக்கள் பணியாற்றுவார்கள் என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.