சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் லாபநோக்கமுடன் தனியாக மாலையில் டியூசன் எடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டிருந்தது. தீர்ப்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். பணம் பெற்றுக் கொண்டு லாபநோக்கத்துடன் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு இரசு இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும், டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
மேலும், இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க பிரத்யேகமாக இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனியார் டியூஷன், பகுதி நேர வேலை, இதர வேறு தொழில்கள் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.