சென்னை: பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யக்கோரி வணிகர்கள் தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன், பி.டி. ஆஷா அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அரசு, தங்கள் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்ய தடை விதிக்கிறது என்றும்,  மற்ற மாநிலங்களிலிருந்து நெகிழி பொருட்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் நெகிழி மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டும் என்று கூறியதுடன், பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச் செல்ல நெகிழி பைகள் இலவசமாக கொடுக்கப்படுவதாகவும், ஆனால் மாற்று பொருட்களால் ஆன பைகளுக்கு அதன் மதிப்பைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் நெகிழ் தடை தொடர்பாக  எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். மேலும், தமிழ்நாட்டில் மஞ்சள்பை திட்டம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாகவும் கூறியதுடன்  நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் நெகிழி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களிலும் ஏன் செய்ய முடியாது என்று கேள்வி எழுப்பியதுடன், ஒரு குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதில் நெகிழி தடை பொருட்கள் மீதான உத்தரவை அமல்படுத்தலாமே என யோசை கூறினார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், முதற்கட்ட தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மூன்று வாரங்கள் கழித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.