சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டார். அதை தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் மூத்த உறுப்பினருமான துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் மாலை தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு, முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் முதல் பாகம் நூலை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட, அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சி அரங்கிற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகை தந்த நிலையில், பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதுபோல, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அனைவரையும், திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை திமுக எம்.பி. கனிமொழி வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்.பிக்கள், திமுக தோழமை கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.