டெல்லி: உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மத்திய கேபினட் அமைச்சர்கள் ஹர்தீப் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் ராணுவ ஜெனரல் விகே சிங் ஆகியோரை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அத்தியஅரசு அனுப்ப தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைனில் இந்திய மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அவர்களை மீட்க ஆபரேசன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்களை அனுப்பி உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்தியஅரசு மீட்டெடுத்து வருகிறது. ஏற்கனவே 5 சிறப்பு விமானங்கள் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 7 விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் உள்ள அண்டை நாடுகளுடன் பேசி, இந்தியர்களை அங்கு வரவழைத்து, பின்னர் விமானம் வழியாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், உக்ரைன் எல்லை நாடுகளின் அமைச்சர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்றும் பணியை ஒருங்கிணைக்கவும் மாணவர்கள் வீடு திரும்ப உதவவும் இந்திய அரசு கேபினட் அமைச்சர்கள் ஹர்தீப் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் விகே சிங் ஆகியோரை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.