சென்னை

கோவையில் நேற்று முன் தினம் நட்சந்த மாநகராட்சி தேர்தல் வாக்குகள் எண்ணிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததில் இருந்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த படி இருந்தன.   இதையொட்டி பறக்கும் படையினர் மாநிலம் எங்கும் பல இடங்களில் சோதனை நடத்தி ஏராளமான ரொக்கம், பரிசுப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் அதாவது பிப் 19 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.  இதில் கோவை மாநகரில் அனைத்துக் கட்சியினரும் வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாக ஒரு வழக்கு ஈஸ்வரன் என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.   அந்த மனுவில் வாக்கு எண்ணிக்கையைத் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இன்று சென்னை உயர்நீதிமன்றம்,இந்த வழக்கை விசாரித்தது.  அப்போது  கோவை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணத் தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஆகவே நாளை ஏற்கனவே அறிவித்தபடி கோவையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.