ஈரோடு: அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால், இந்த தேர்தலில் பாஜகவினர் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என ஈரோட்டில் வாக்களித்த மூத்த காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, ஈரோடு அக்ரஹார வீதி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை உள்ளாட்சித் தேர்தல் தரப்போகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை தி.மு.க கூட்டணியை வெற்றி பெறச் செய்வதன் மூலம், ஸ்டாலின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுடன் இருந்தபோது டெபாசிட் பெற்றார்கள். அ.தி.மு.க-வோடு இல்லை என்ற காரணத்தால் கண்டிப்பாக தமிழகத்தில் இந்த தேர்தலில் எங்கும் டெபாசிட் பெற மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.