சென்னை: வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லம், கடந்த அதிமுக ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைது வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. பின்னர் வேதா நிலையத்தின் சாவியை தீபாவிடம் ஒப்படைத்தனர்.
இதனை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், திமுக அரசு ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க விருப்பவில்லை என தெரிவித்தது.
இதுதொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவில், வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேதா இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும், நிலம் கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வழக்கில் வரும் 18ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.