சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில், சுப.வீரபாண்டியன்தலைமையில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 23ந்தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் “சமூகநீதிக் கண்காணிப்பு குழு“ அமைக்கப்படுவதாக கூறப்பட்டது.
இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும். இந்த பணிகளை மேற்கொள்வாடு இவை சரியாக நடைமுறைப் படுத்தப்படா விட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும் சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதையடுத்து, இதன் தலைவராக சுப. வீரபாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணிபுரிய விரும்பும் துணை ஆட்சியர்களின் பட்டியலை அனுப்ப, துறைகளின் தலைவர்கள், ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதன்பின்னர் குழுவில் உதவும் நபர்களின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.