சென்னை: தமிழ்நாட்டில் வரும் 26ந்தேதி  புத்தகப் பைகள் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், இன்று அந்த அறிவிப்பை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பள்ளி, கல்லூரிகளும் முழுமையாக நடைபெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி,  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகப் பை இல்லா நாள் கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி அன்றைய தினம்,  மாணவர்கள் பள்ளிக்கு புத்தகங்களை எடுத்துவர வேண்டாம் என்றும், அனுபவம் மூலம் வாழ்க்கைக் கல்வி கற்றுக் கொடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

மேலும் அன்றைய தினம்  மாணவர்களுக்கு மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் பற்றிப் பயிற்சியளிக்க அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன்,  மாணவர்களுக்குச் சிற்றுண்டி, பரிசுப் பொருட்கள் வழங்க 1.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று திடீரென்று பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்யவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது இருப்பதால்,  வரும் 26ஆம் தேதி அன்று நடைபெற இருந்த புத்தகப்பை இல்லா தினம் ரத்து செய்யப்படுகிறது என்று விளக்கம் கூறியுள்ளது.