ஆயிரம் ஆண்டு பழமையான பன்றியின் சிலையை சீனாவில் ஒரு குரு வைத்திருக்கிறார். அதிசய சக்தி படைத்த அந்த சிலையை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறார்.

அந்த சிலையை வைத்து தாங்கள் முன்னேற ஒரு சுயநல கும்பல் நினைக்கிறது. அந்த சிலையை குருவிடமிருந்து பறிக்க திட்டமிடுகிறது.

இதனால் சிஸ்யரிடம் அந்த சிலையை கொடுத்த குரு, “எங்காவது போய்விடு” என்கிறார். சிஸ்யர், அந்த சிலையுடன் தமிழ்நாடு வருகிறார்.

காலம் ஓடுகிறது..

தற்போது அந்த சிலையைப் பற்றி அறிந்து மூன்று கும்பல், அதை எடுத்து தங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறது.

சுயநலம் பிடித்த காவலர்கள் இருவர் தங்கள் துறைக்குச் சொல்லாமல் சிலையைத் தேடி அலைகிறார்கள், ஒரு ரவுடிக் கும்பலும் இதே நோக்கத்தோடு திரிகிறது. இடையே, ஒரு உதவி இயக்குநர் தனது உதவி இயக்குநருடன் இந்த தேடலில் இணைகிறார்.

மூன்று கும்பலுக்கும் நடக்கும் போட்டி, பிரச்சினையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். இறுதியில் சிலை யாருக்கு கிடைத்தது என்பதுதான் கதை.


விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், நிஷாந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்து உள்ளனர்.

த்ரில்லர் என்றாலும் அதை சீரியஸாக இல்லாமல், நகைச்சுவையுடன் கலந்து அளித்திருப்பது படத்துக்கு கூடுதல் பலம்.

ஓவியங்களைக் கொண்டு பன்றியின் கதையைச் சொல்லும்போதே ஈர்ப்பு ஏற்படுகிறது. அடுத்து தற்போதைய காலகட்டத்திற்கு வரும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது.

இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்கம் என அனைத்தும் படத்துக்கு பலம்

குட்டி குட்டி பிளாஸ்பேக், திரைக்கதை வேகத்தை தடுக்காத காமெடி என்று முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர்.

வடிவேலுவின் பிரபல வசனமான, ‘பன்றிக்கு நன்றி சொல்லி..’ என்ற வார்த்தைகளை தலைப்பாக வைத்திருந்தாலும், அதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

ரசிக்க வைக்கும் படம்..!