சென்னை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது.
வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொகுதிப் பங்கீடு குறித்து தமிழக பாஜக மற்றும் அதிமுக இடையில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் கலந்துக் கொண்ட ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பாஜகவுக்கு 5% இடங்கள் ஒதுக்க உள்ளதாகக் கூறினர். ஆனால் பாஜகவினர் 20% இடங்கள் மற்றும் ஒரு சில மாநகராட்சி மேயர் பதவி உள்ளிட்டவற்றைக் கேட்டனர். அதிமுக இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் போதே அதிமுக ஒரு சில இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.
இதனால் பாஜக மிகவும் கோபம் அடைந்தது. இது குறித்து பாஜக தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை அண்ணாமலை அறிவித்த உடன் பல பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக துணையுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற நினைத்த பலருக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இவர்களைப் போல் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததால் ஊழல் புகாரில் சிக்கி உள்ள அமைச்சர்களில் பலர் தங்கள் மீது வருமான வரி மற்றும் அமலாக்கப்பிரிவினரால் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்னும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் அதிமுக அடி மட்டத் தொண்டர்கள் பாஜக அறிவிப்பை இனிப்புக் கொடுத்துக் கொண்டாடி உள்ளனர். பாஜகவின் கூட்டணியால் தங்கள் கட்சியினர் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துள்ளதாலும் அதனால் தான் பலர் தோல்வி அடைந்ததாகவும் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரிவினால் தங்கள் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.