டில்லி
தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெகாசஸ் குறித்து விவாதம் நடக்காது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியாக உள்ள ஏராளமான திட்டங்களையும் சாதனைகளையும் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று தொடங்கிய கூட்டத் தொடரைச் சுமுகமாக நடத்த ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோதி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
கூட்ட முடிவில் அமைச்சர் செய்தியாளர்களிடம்,”முக்கிய பிரமுகர்களின் தொலைப்பேசி உரையாடல்கள் பெகாசஸ் மென்பொருள் மூலமாக ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறும் விவகாரம் குறித்து தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதம் நடத்தப்பட மாட்டாது.
தற்போது இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து இந்த நேரத்தில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதம் நடத்தப்பட மாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.