டெல்லி: இந்தியாவின்புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து வந்த கே.வி. சுப்ரமணியன், 2021 டிசம்பரில் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து அந்த பதவிக்கு வேறு யாரும் நியமிப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது, இப்பதவிக்கு டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுஉள்ளார். அவர், நேற்று முறைப்படி இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
டாக்டர் ஆனந்த் நாகேஸ்வரன், தமிழ்நாட்டின் மதுரையில் 1963ம் ஆண்டு பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இதையடுத்து ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி மையத்தில் எம்.பி.ஏ., முடித்து, அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஐ.எப்.எம்.ஆர்., வர்த்தக பல்கலை ‘டீன்’ ஆகவும், கிரியா பல்கலையில் கவுரவ பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பொருளாதாரம், பங்கு வர்த்தகம், அன்னியச் செலாவணி உள்ளிட்டவை தொடர்பாக பல நுால்களை எழுதியுள்ளார். 1994 மற்றும் 2011 க்கு இடையில் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல தனியார் செல்வ மேலாண்மை நிறுவனங்களுக்கு மேக்ரோ-பொருளாதார மற்றும் மூலதன சந்தை ஆராய்ச்சியில் பல தலைமைப் பாத்திரங்களை அவர் வகித்துள்ளார்
கடந்த 2019 – 21 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதி நேர உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பிப்ரவரி 1ந்தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நுாலாசிரியர், பேராசிரியர், ஆலோசகர் என பன்முகத் தன்மையுள்ள அனந்த நாகேஸ்வரன், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியாக இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.